Wednesday, December 22, 2010

குழந்தைப் பாலியல் சீண்டல்கள்




தலைப்பைப் பார்த்ததுமே என் குழந்தைக்கா ச்சே! ச்சே! அப்படின்னு மனசு லேசா அறிச்சிருக்குமே.

அச்சச்சோ! உங்க நினைவை எங்கோ கொண்டு போயிடாதீங்க. அப்படியே வீட்டுக்குள்ளேயே கொண்டு வாங்க. ஆமாங்க இப்படி பட்ட துயரத்தை பெற்றோர்தான் வி(வே)லை கொடுத்து வீட்டிலேயே வாங்குறோம்.

" என் குழந்தையைப் பார்த்துகோங்க" ன்னு சொல்லிட்டு 'டாட்டா' கிளம்பும் பெற்றோரா! கவனம் தேவை.

பாலியல் சீண்டல்களால் அவஸ்தை படும் குழந்தைகள் வெகு இயல்பாக பெற்றோரிடம் நடந்து கொண்டாலும், ஆழமான மன இறுக்கத்திற்கு ஆளாகிறார்கள். தன்னால் எதிர்க்க முடியாததால் பற்களை கடித்துக்கொண்டும், கடும் கோபம் மற்றும் வெறுப்பு நிறைந்து குழந்தைகள் காணப்படுகிறார்கள்.

இதில் ஆகா! எனக்கு ஆண் பிள்ளை அப்படீன்னு ஓரத்துல என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு. ஆணென்ன! பெண்ணென்ன! யாரைத்தான் விட்டு வைக்கிறாங்க.


இரண்டு மில்லியன் குழந்தைகள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகுறாங்கன்னு உலகக் கணக்கெடுப்பு (WHO) சொல்லுது. இதுல சொல்லாமல் விட்டவர்களை கணக்கெடுத்து மாளாது.

இப்படி ஏன் நடந்துக்குறாங்கன்னு கோபம் வருதுல்ல? குழந்தைகளைச் சீண்டுபவர்களுக்கு, தனக்கும் சிறு பிள்ளையில் இது போன்ற சம்பவம் நடந்திருக்கலாம் என்பது மனொரீதியாக சொல்லப்படும் காரணம்.

இதையும் தாண்டி நம் குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றத்தை பற்றி பார்ப்போம்.

  • கல கல என ஓடித்திரிந்த குழந்தை வயதுக்கு மீறிய வெட்கத்தை காண்பிக்கிறதா?
  • நன்றாக படிக்கும் குழந்தை படிப்பில் நாட்டம் குறைந்து காணப்படுகிறதா?
  • காரணம் கூற முடியாமல் வெட்டுகள், காயங்கள் இருக்கிறதா?
  • அபரிமிதமான பசியால் மிகுதியான உணவை குழந்தை நாடுகிறதா?
(குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்.)
  • வயதுக்கு மீறியவர்களுடன் நெருக்கமான நட்பு.
  • காரணமற்ற விலை உயர்ந்த அல்லது நிறைய விலை குறைந்த பரிசுப்பொருட்கள் ஒருவரிடம் இருந்தே கிடைக்கிறதா?
(வேண்டாம் என்று சொல்ல குழந்தைக்கு பழக்கி விடுங்கள்)


பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிகவும் குற்ற உணர்ச்சியில் தளைத்து விடுகிறார்கள். உறவினராக இருக்கும் பட்சத்தில் காண்பித்துக் கொடுக்க மனமின்றி மனதின் ஆழத்திலே புதைத்து விடுகிறார்கள். அவர்களிடம் நாம் உணர்ச்சி வசமாகாமல் நயமாகப் பேசுவது குழந்தைகளின் மனதிற்கு இதம் தரும்.

டீன் ஏஜ் குழந்தைகள் அதிகம் முறையிடுவது, "அம்மா ரொம்ப சந்தேகப்படுறாங்க" ன்னு. இதில் தாயின் அனுபவமும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதெல்லாம் சொல்லி மனச ரொம்ப கசக்கிட்டேனோ?

நடந்தவைகளை மறந்து குழந்தைகளின் மனம் சிட்டு குருவி போல் சுதந்திரமாய் பறக்கட்டுமே!




Wednesday, May 12, 2010

லூசாப்பா நான்


ஒரு நண்பர் தன் அப்பா மனநல மருத்துவம் வைத்திருந்தாகவும் அங்கு நடந்த சில காமெடிகளை மிக வர்ணனையுடன் கூறிகொண்டிருந்தார்.

உலகில் மிகச்சிறிய சதவிகிதம் போக அனைவருமே பைத்தியம் தான். அனால் அதை பெரும்பாலானோர் செய்யும் பொழுது அதை பைத்தியம் என்று எடுத்துக்கொள்வதில்லை. அதாவது வீட்டை பூட்டிவிட்டு சிறிது தூரம் போனபின்னர் ஓடி வந்து பூட்டினோமா இல்லையா எனப் பார்ப்பவர் பலர். இதை அநேகம் பேர் செய்வதால் சரி சரி விடு நம்ம பண்ணாததான்னு சுளுவா எடுத்துக்கறோம் .

அவர் இன்னும் சில விஷயங்கள் கூறியது மிகவும் சிந்திக்க வைத்தது. அவர் ஒரு கைதேர்ந்த இசையமைப்பாளர். " என்னை இசையே இல்லாத உலகத்தில் கொண்டுவிட்டால், நானும் பைத்தியங்களில் ஒருவன் என்பது நிச்சயம் என்றார்". அப்போ நாம பார்டர்க்கு இந்த பக்கமா அல்லது அந்த பக்கமா அப்படிங்கறது தான் பேச்சே.

சொல்லுறவர் சொல்லிட்டுப் போயிட்டார். இருந்தாலும் நிறையப் பேரின் குடும்பப் பிரச்னைக்கு இப்படி தான் பிரச்சனையை தொடங்குதோ?

ஒரு பெண் தன் திருமணத்தின் முன் செய்து கொண்டிருந்த சில நல்ல விஷயங்களை, திறமை வெளிக்காட்டும் விஷயங்களை திருமணத்திற்குப் பின் இடமாற்றத்தால், புதிய குடும்பச் சூழலால், பொருளாதாரம் போன்றவற்றை மனதில் கொண்டு செயல் படுவதால் தனக்கு விருப்பப்பட்ட ஒரு விஷயம் தள்ளி வைக்கப்படுகிறது.

இன்ஜினியரிங், மருத்துவம் முடித்த நிறைய பெண்கள் வீட்டில் அடங்கியவரை வெளிநாடுகளில் காணலாம். இதற்கு சீட்டு கிடைக்கப் பட்ட பாடென்ன, படிக்கப் பட்டப் பாடென்ன, செலவுகள் என்னன்ன... அத்தனைக்க்காகவும் சுறுசுறுப்பாக ஓடியவர்களை டிவி இருக்கு, பிரிஜ் இருக்கு, போன் இருக்கு, நெட் இருக்கு, வாஷிங் மெஷின் இருக்கு மைக்ரோவேவ் இருக்கு, சுகமாய் இருக்கலாம் என்றால் தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள்.

அப்போ பார்டர் தாண்டிய பைத்தியம் தானே அவள். மாட்டுனது அவள் கணவன். அவர் குடுமியப் பிடிச்சு ஆட்டுரதுல , சிலபேர் என்னடா இது சரியான லூச கட்டிகிட்டோம்னு புலம்புகிறவர்கள் உண்டு.

இப்பொழுதெல்லாம் இவைகளைப் பற்றி சரியாக சிந்திக்கக் கூட நேரமில்லை. செபரஷன் அல்லது டிவோர்சில் சென்று முடிகிறது வாழ்க்கை பலருக்கு. வாழ்க்கை ரீசெட் ஆனவுடன் வழக்கம் போல் ஆகிவிடுகிறார்கள்.

இப்போ பாத்ததெல்லாம் பார்டர்க்கு முன்னும் பின்னும் தான. பார்டர்ல இருக்கிறவங்க எப்படி இருப்பாங்கன்னு யோசிச்சுப் பாருங்க. இதுக்கு பேர் "bipolar syndrome".

ஒரு விஷயத்தில் அபரிமிதமான திறம் வாய்ந்தவர்கள் , கற்பனை ஆற்றல் படைத்தவர்கள் இதில் பாதிக்கபட்டவர்களாம்.

இவ்வளவு பெரிய பதவியில இருக்குறாரு, இப்படி லூசு மாறி பேசுறாரே என அநேகம் திறம் வாய்ந்தவர்களை கமெண்ட் செய்வதுண்டு. இன்னும் சிலரை நாம் கூறியிருப்போம், "நல்ல தெறமையானவருய்யா, கோபம் மட்டும் வந்தா வாயில என்ன வருதுன்னு தெரியாம சகட்டுமேனிக்கு திட்டிபுடுவாருன்னு ".

இவங்க ரெண்டு விதமான மன எல்லையைத் தொடுறவங்க. ரொம்ப நல்லா அன்பாவும் இருப்பாங்க திடீர்னு ஆக்ரோஷமாக மாறிடுவாங்க .

Famous personalities நிறைய பேருக்கு இந்த பிரச்சனை இருக்கு.

Writer - Charles Dickens

Actor - Jim Carey

Dancer - Alvin Alley

U.S. President - Abraham Lincoln

comedian, actor, writer, artist - Jonathan Winters


இன்னும் பலர்.

நம் நாட்டு திறமைசாலிகளை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். இந்த ஆட்டைக்கு நான் வரல.

Wednesday, March 24, 2010

ஐயோ அம்மா/ப்பா அடிக்காதீங்க...


ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் போது ஒரு குழந்தை தன் அம்மாவிடம் இருக்கும் ஒரு பொருளை கேட்டு அடம்பிடித்து அழ, அம்மா அங்கும் இங்கும் பார்த்து ஒரு வித சங்கடத்துடன் சிரித்து விட்டு குழந்தையை கஷ்டப்பட்டு செல்லமா சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அந்தம்மாவிற்கு அடிக்கணும்னு தன்னால கை துருதுருன்னு வந்தாலும், ஒருவழியா செமாளித்து அழுகையை நிறுத்தும் போது , லேசான "குளிரிலும் வியர்வை முத்துக்கள் முகத்தில் படர்ந்து விட்டன.

என்ன செய்வது ஆஸ்திரேலியா வாச்சே. நம்மூர்னா இந்நேரம் முதுகில் இரண்டு விழுந்திருக்கும் அக்குழந்தைக்கு.

"பிரம்பைக் கையாளாதவன் தன் மகனைப் பகைக்கிறான்" என்கிறது பைபிள். குழந்தைகளை அடித்து வளர்க்க வேண்டும் என்பது காலம் காலமாக நாம் பின்பற்றும் கலாச்சாரம்.

தண்ணியடிப்பவன், போதை பொருளுக்கு அடிமையானவன், தன் குழந்தைகளை படுத்தும் பாட்டை அறிந்து, எவனுமே குழந்தைகளை அடிக்கக் கூடாது என சட்டம் இயற்றினர். இதையும் மீறி "சாதாரண", குடும்பங்களிலும் குழந்தைகளை அடித்து வதைப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது பல ஆய்வுகள்.

தன்னால் எதிர்க்க முடியாத பருவத்தில் குழந்தைகளை(0-14) திருத்துகிறேன் பேர்வழி என்று அவர்களை அடித்து துன்புறுத்துவதில் எந்த வித நியாயமும் இல்லை.

"ன்" எனச் சொல்லபோகும் எல்லா இடத்திலும் "ள்" பொருந்தும்.

"நல்லா எத்தன நாள் பொறுமையா சொன்னேன் தெரியுமா! ஒரு நாள் விட்டு விளாசினேன் அப்புறம் தான் சரியானான்" என வெற்றி வாகையோடு சில பெற்றோர்கள் கூறுவார்கள்.

நல்லாச் சொன்ன நாளெல்லாம் நம் "மனநிலை " என்னவாக இருந்தது, அடித்த நாளான்று நம் "மனநிலை " என்னவாக இருக்கிறது என்பதை சிறிது ஆராய்ந்தால் நமக்கே விளங்கும்.

படித்த புத்தகமோ, விளையாட்டு பொருளோ வீட்டில் போட்டது போட்ட படி கிடப்பது என்றும் வழமை தான் என வைத்துக் கொள்வோம். என்றுமில்லாமல் அதற்காக திடீரென dose விடுவோம் . நன்கு சிந்தித்துப் பார்த்தால், அலுவலகலத்தில் ஒன்று, நல்ல பாராட்டு கிடைத்திருக்கலாம் அல்லது அர்ச்சனை மழையும் இருக்கலாம்.


இது போன்ற காரணங்கள் தான் பள்ளியிலும். என்றைக்கும் விட வகுப்பில் சத்தம் குறைவாக இருக்கும் . திடீரென ஆசிரியை தோன்றி "என்ன இப்படி சத்தம் போடுறீங்க" என்று கூறி, வசவு மழை பொழிந்து, எல்லோரும் முட்டு கால் போடுங்க எனக் கூறிவிட்டு, தான் இன்னும் ஏன் முடித்து தரவில்லை எனத் திட்டு வாங்கியிருக்கும் அலுவலக வேலையோ அல்லது திருத்தல் வேலைகளையோ வேக வேகமாக முடித்து விட்டு bell அடிக்கும் முன் , "ம்ம்ம் இப்படித்தான் அமைதியா இருக்கணும் என்ன" என்று கூறி விட்டு ஓடிவிடுவர்.

குழந்தைகளை அடிப்பதற்கும், தண்டிப்பதற்கும் , நூறு காரணங்கள் கூறினாலும், உண்மையான காரணம் அடித்தவருக்கே வெளிச்சம்.

சரி இப்பொழுது குழந்தைகள் எப்படிப் பட்ட பெரியோர்களின்(பெற்றோர்/ஆசிரியர், பராமரிப்பாளர்-carer) மனநிலையில் அடி வாங்கப் படுகிறார்கள் என பார்ப்போம்.

மனவுளைச்சல் : வேலை, பணம் பற்றாக்குறை, உடல் நலம் போதாமை, கணவன்-மானைவி பிரச்சனை.

கூடுதலான எதிர்பார்ப்பு : மெதுவாகக் கற்றுகொள்ளும் திறன் படைத்த குழந்தைகள் வெகுவாக பாதிக்கப் படுகிறார்கள்.

பிற: மிகக் குறைந்த குழந்தை வளர்ப்புத் திறன், குழந்தையை மாற்றாக பார்த்துக் கொள்ள ஆளில்லாமல் தவிப்பவர்கள், குழந்தைகளின் தேவையை முன்னிறுத்தாமல் அவசரத்தில் இருப்பவர்கள் இதில் அடங்குவர்.

அடித்து துன்புறுத்துவோர் பற்றி இன்னும் சில.

  • ஏழை மக்களும், படிப்பறிவில் குறைந்தவர்களே குழந்தையை அடித்து துன்புறுத்துவர் என்பது உண்மையல்ல.
  • மிகக்குறைந்த வயதில் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் இவ்வாறு நடந்து கொள்வர் என்பதும் உண்மையல்ல.
  • பக்திமான்கள், மற்றும் சமுதாயத்தில் நல்ல வேலையில் இருப்போர் கூட குழந்தையை அடித்து துன்புறுத்துபவர்களில் சளைத்தவர்கள் அல்ல.
இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வெட்கம், பயம், தனிமைப் படுதல், கவலை, கைவிடப் பட்ட நிலை, போன்றவைகளை உணர்கிறார்கள். இது தவிர மற்ற குழந்தைகளிடம் வன்மையாக நடந்து கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்.

இவ்வாறான குழந்தைகள் அடி ஒன்றுக்கே "tune" ஆகி விடுகிறார்கள் என்பதை நன்கு அறிந்து கொள்ளலாம் . அடி என்ற ஒன்று கிடைக்கும் வரை என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்பது குழந்தைகள் மனதில் பதிந்து விடுகிறது.

ம்ம்ம்... அதுக்காக அடிக்காம எப்படி இருக்கிறது? சரி, அடித்தே ஆகவேண்டும் எனும் அவசியம் ஏற்படும் பொழுது முழங்கால் கீழ் அடிப்பது சிறிது நலம்.

இனி கையோ, காலோ, குச்சியோ,பெல்டோ ஓங்கும் போது ஒரு நொடி யோசிப்போமா?

Thursday, March 4, 2010

பொறாமை தானே!


நிறையபேரின் கொந்தளிப்பை விட ஒவ்வொருவர் எழுத்துக்களிலும் சிறு பொறாமை தெரிகிறது.

இப்படியும் சில பேர் : ஓடி ஓடி சம்பாதிப்பதே, காலை ஆட்டிக்கொண்டு ரிமோட் அமுக்கி டிவி பார்த்துட்டே இருக்க , பக்கத்துல யாராவது நமக்கு சேவகம் பண்ணனும்னுதானே. ஆனால் மனைவி ஒருபக்கம், கணவர் ஒருபக்கம்னு ஆபிசுக்கு ஓடுற காலத்துல, குழந்தையும் வேறு இடம். இவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து நன்கு முகத்தைப் பார்த்தே வெகு நாள் ஓடியிருக்கும்.

இப்படியும் சில பேர்: அவனவன் வேலைக்கும் போயிட்டு மனைவி காலையும் அமுக்கிவிட்டு, கலையில் காபி போட்டு எழுப்பிட்டிருக்கான், இவர் இன்னாடான்னா சொகுசா இருக்குராறேன்னு தானே எல்லோர்க்கும் பொறாமை.

இதல்லாம் விடுங்க,
நல்ல வேளை இந்த முறை வந்த பிரச்சனை ஏழை மக்களின் வயிற்றில் அடிக்காதபடி ஒரு பிரச்சனை உருவாகியிருக்கு. அதுவரை சந்தோசப்படுவோம்.

ம்ம்ம் பில்டிங் ஸ்ட்ரோங் ... வீக் .






Monday, February 1, 2010

வெளிநாட்டில் வேலையா! மோசடியை எப்படி அறிவது


முன்பெல்லாம் ஏமாத்துறவங்க நம்மைச் சுற்றி இருக்கும் நாலு பேருக்குள்ள தான் இருக்கும். இப்போவெல்லாம் எத்த்த்தன.

நண்பர் ஒருத்தரு எப்படியாவது வெளிநாட்டில் வேலை வாங்கிடணும்னு தவியா தவிச்சாரு. மாட்டுனடி! மவனேன்னு வலைக்குள்ள சிக்க வைக்கிறது தானே ஏஜெண்டுக வேல.

"மலேசியால தொலைபேசியில 3 சுற்றுத் தேர்வு. உங்க companyக்காகத்தான் நான் உசிரோட இருக்கென்ற மாதிரி நீ பேசு. மிச்சத நான் பார்த்துக்கறேன்", இது ஏஜெண்டு.

இதை வீட்டில் வந்து சொன்னவுடன், " எவன்ட்டையும் இத பத்தி உளரீராத. மலேசியால இருக்க உன் friend சோமுட்ட மட்டும் இதப்பத்தி கேட்டுக்கோ. இது அம்மாவின் கண்டிப்பு.

தொலைபேசி தேர்வுல நல்லா வந்தாலும் நானே அந்த கம்பெனி GMக்கு சொன்னேம்பாருங்க அதுனால வேலை உங்களுக்கே தர்றதா ஒத்துக்கிட்டாரு. இந்த வேலைக்கு அவ்வளவு போட்டி போங்க. இப்போ நீங்க செய்ய வேண்டியது எல்லாம், விசாக்காக 700 டாலர்கள் கட்டணும். மத்ததெல்லாம் உங்க வீடு தேடி வரும்.

நண்பனும் கனவு வெள்ளத்தில் மூழ்கியவாறே அனைத்து பணத்தையும் கட்டி முடித்தார்.

வேலைக்கான agreement கையில் வந்தது. ஒரு ஆர்வக்கோளாறால் வலைதலத்தினுள் சென்று இந்த வேலைக்கான பொறுப்புகளின் தேடல்களைத் துவங்க, வந்து நின்றது www.fraudwatchers.com

அதுல , நண்பனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதே வேலை அதே code no. வேலைக்கு எடுக்கப்பட்டிருக்கும் ஆள் மட்டும் வேற. எது இன்னாடா புதுக் கதையா இருக்கேன்னு இன்னும் சிறிது உள்ளே போனப்போ தான் தெரிஞ்சுது இதே வேலையாத்தான் செல பேர் திரியிராய்ங்கன்னு .

போலி விசாக்களை தயார்செய்து நம்மைப் பின்னால் மலேசியா போலீசில் அடிவாங்க வைக்கிறது எந்த கூட்டம்ன்னு தெரியாது. ஆனா இது fraud தான்னு சொல்ல ஒரு வலைதளமே இருப்பது கொஞ்சம் ஆசுவாசம்.

இவை மட்டுமல்ல அந்த வலைதளத்தில் ஏமாறாமல் இருக்க சில டிப்ஸ்களும் உண்டு. ஈமெயில் மோசடி, ஏற்றுமதி- இறக்குமதி எனும் பெயரில் ஏமாற்றும் போலி கம்பனிகள் என்பனவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.

வலைதளத்தின் பெயரைச் சொன்னவுடனேயே அங்கு தாவி சென்றிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

இருந்தாலும்...

வாழ்க்கையில் யாராவது யோசனை கூறினால் "பாசக்கார பயலுகப்பா" என ஒரேடியாகக் அவர்கள் யோசனையிலேயே கவழ்விந்து விடாமல், கொஞ்சம் உஷார் ஆகிடுவோம்ல!