Wednesday, November 4, 2009

கேள்விகளைக் குறைப்போமே ப்ளீஸ்


புதிதாக பார்ப்பவரையோ அல்லது நீண்டநாள் கழித்து பார்க்கும் சிலரையோ, ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காகவே சில கேள்விகளைக் கேட்டு அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிவிடுகிறோம்.

நடுத்தர வயது மனிதர்களைக் கண்டவுடன் என்னடா பேச்சுத் தொடங்க என யோசித்து, "உங்கள் குழந்தை எந்த கிளாஸ் படிக்குது"ன்னு ஒரு கேள்வியை எழுப்ப , பதில், மெலிதாக "எங்களுக்குக் குழந்தையே இல்லீங்க" என்று வரும். நாம் அதை வெகு லகுவாகக் கேட்டுவிட்டு வந்து விடுகிறோம். ஆனால் இது ஒரு மன உளைச்சலாகவே அத்தம்பதியருக்கு சிறுது நாள் தேங்கி இருக்கும் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

பெரியோர்கள், ஓய்வு பெற்றவர்களிடம் , ஓய்வு ஊதியம் போதாவிட்டால் நாம் தான் ஏதோ பணம் கொடுத்து உதவபோவது போல, "வரவு பணம் பாதி ஆகிடுச்சுனா கஷ்டம் தான் என்ன?" என்று வருத்தப்படுவது போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டுவிட்டு சும்மாவிடாமல் அதற்கு ஒரு பதிலை வேற எதிர்பார்க்கிறோம். அவர்கள் அதற்கு பதிலளிக்க எவ்வாறு மனம் கூசும் என்பதை அறிய நாம் தவறிவிடுகிறோம்.

இதில் இன்னும் கூட கேள்விகள் தொடரும், "சும்மா தானே இருக்கறீங்க", அல்லது சிலர் "பொழுது எப்படி போகுது?", எனக் கிண்டலாகக் கேட்போரும் உண்டு. வயதானால் தனக்கும் இதே நிலைதான். இதைப்போன்று தன்னை யாராவது கேட்டால் எப்படி இருக்கும் என சிறிது சிந்திப்போமானால் சில கேள்விகள் நாவினில் இருந்து உதிர்வதுத் தானாக நின்றுவிடும்.

யாருக்கு வேலை இருக்கிறது, எப்பொழுது வேலை போகிறது என்று அறியமுடியாத இக்காலத்தில், நாம் "எங்கே வேலை செய்யிறீங்க?" என்பன போன்ற கேள்விகளையும் தவிர்ப்பது மிக்க நலம் என்பது என் கருத்து. ஆண்கள் வேலையில்லாமல் பெண்கள் மட்டுமே வேலை செய்து வீட்டை காப்பற்றுமிடத்தில், (என்னதான் நண்பராக இருந்தாலும்) நமது நக்கலான பேச்சு அவர்களிடம் போய் காட்டுவது முறைதானா?

சிலநேரங்களில் திருமணம் ஆகாத, ஆணோ, பெண்ணோ, வைத்திருக்கும் இடத்தில், என்னங்க வரன் பாக்குறீங்களா என்னும் சிறிய பிட்டைப் போட்டு நகர்ந்து விடுவார்கள் நம் மக்கள். என்ன கொடுமை சரவணா இது!

சிலர் நாட்பட்ட நோயுடன் இருப்பார். அவர்களைக் கண்டு இந்த நோய் சரியாபோச்சா, அந்தநோய் சரியாபோச்சா , அப்புறமும் ஏன் படுத்தே இருக்குறீங்க? என்று அவர்களையும் விட்டுவைப்பதில்லை.


"இப்படியெல்லாம் நான் கேள்வியே கேட்கிரதில்லீங்க", என்பவர்களும் இருக்கலாம். ஆனால் அந்த, அந்த ஆட்கள் இடத்தைவிட்டு நகர்ந்ததும் அவர்களை பற்றி விசாரிக்கும் ஆர்வமுள்ளவர்கள் அதிகம். இது நேரே கேட்பதை விடக் கொடுமை.

இவை போன்ற சமுதாயக் கட்டாயப் பிரச்சனையில் இருப்பவர்கள் எப்பொழுதும் இவைகளை மென்று தின்று கொண்டே இருப்பார்கள் (depression). பிறரைக் கண்டால் சிறிது ஆசுவாசம் என்றால், பிறரும் எரிகிற விளக்கில் தன்னால் முடிந்த எண்ணையை ஊற்றிவிட்டுப் பறந்து விடுவர்.

இந்த மன உளைச்சலில் உள்ளவர்கள் என்னதான் நம்மிடம் தைரியம் உள்ளவர்கள் போல் பேசினாலும், குடும்பத்தினுள்ளேயே, காரணமற்ற கோபம், குழப்பம் , வெறுப்பு , இவைகளுக்கு உள்ளாகின்றனர் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

ஆதலால் நம்மால் ஒருவருக்கு உதவ முடியாத பட்சத்தில் மனதை புண்படுத்தாமலாவது இருப்பது நல்லது என்பது என் கருத்து. நாம் சந்திப்போரை நல்ல விஷயங்கள் அல்லது பொது விஷயங்கள் பேசி மகிழ்வாக வைத்திருப்போமானால் அதுவே நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நாம் செய்யும் பெருந் தொண்டாகும்.

இது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. இருந்தாலும், தலை கலைந்துவிட்டால் மீண்டும் வாரிக்கொள்வது போல, நம் மனதின் சில இடங்களில் சீர்குலைந்திருந்தால் நம்மை நாம் சரி பார்த்துக் கொள்வதற்காகத்தான்.

என்ன நண்பர்களே கைகொடுக்குறீர்களா!!!

"கோயிலில் வாசற்படியாக இருந்தாலும், தெப்பகுளத்தில் மீனாக இருந்தாலும் குறை ஒன்றும் இல்லை"

Saturday, August 22, 2009

மனம் பேசியதே


நமக்குத் தெரிந்த ஒருவருக்கு, ஒரு கொடிய வியாதி வந்ததென்றால் நாம் உடனே சொல்வது, அவருக்காப்பா! அவரு தண்ணியடிக்கமாட்டாரு, தம் பழக்கம் கூட கிடையாதேப்பா என உடனே நாம் ஒரு "உச்" கொட்டுவோம்.

சில நோய்கள் வருவதற்கு நாம் மனதில் எடுக்கும் முடிவுகள் மற்றும் மனதில் எழும் எண்ணங்களின் பங்கை "Heal Your Body" என்னும் நூலில் பிரபல மனோதத்துவ நிபுணர் Louise Hay எழுதியுள்ளார். இவர் நல்லவர், வல்லவர் எனக் கூறி அவார்டு கொடுக்க (த்த ) நிறைய பேர் உள்ளதால் நாம் Louise Hay கூறிய விஷயங்களுக்கு நேரே செல்வோம்.

நமது மனம் பேசிய சொற்கள் படிதான் நமது உடல் நமக்கு ஈடு கொடுத்து வருகிறது என்பதுதான் இவரின் (பலரின்) முக்கிய தத்துவம். இவர் இன்னும் சிறுது ஆராய்ச்சியுடன் இன்னின்ன எண்ணத்திற்கு இன்னின்ன நோய்கள் பிறக்கக் காரணமாய் இருக்கிறது என புட்டு, புட்டு வைத்திருக்கிறார்.

அவற்றில் சில,

  • கண் திரை, கண் பார்வை மங்குதல்: நான் அவன் மூஞ்சியிலேயே முழிக்கமாட்டேன் என்பன போன்ற சபதங்களால் ஏற்படும் விளைவுகள்
  • காது கேளாமை :
    வீட்டுக்காரர் () வீட்டம்மா கத்திக்கொண்டே இருப்பார் , என்று நினைத்து எதுவும் காதில் விழுகாதது போல் இருத்தல்.
  • முழங்கால்வலி: அடுத்தவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு நெஞ்சுபொறுக்காதவர்கள், அடுத்தவர்களின் முன்னேற்றப்பாதையில் தடையிடுபவர்கள்.
  • ஒற்றைத் தலைவலி: தன்னைத் தானே விமர்சித்தல் ( Self Criticism), பயம்.
  • ஆஸ்துமா: வெளியில் சொல்லமுடியாமல் மனதிலேயே அழுவது.
  • மூலம்: கடந்த காலம் பற்றிய கோபம், இறப்பைக்குறித்த பயம்.
  • மலச்சிக்கல் : கடந்தகால நிகழ்வுகள், நினைவுகள் அவற்றை விட்டு வெளியே சிந்திக்க மறுப்பது .
  • மேல் முதுகு வலி : தன்னிடம் அன்பு செலுத்த யாரும் இல்லை என நினைப்பவர்கள்.
  • நடு முதுகு வலி : குற்ற உணர்ச்சி .
  • கீழ் முதுகு வலி : பண பலம் இல்லை என நினைத்துக்கொண்டே இருத்தல் .
  • மாதவிடாய் பிரச்சனை : பெண்மைத் தன்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பது .
  • மார்பகப் புற்றுநோய் : அதிகத் தாய்மை பாராட்டுதல்
  • தைராய்டு : அவமதிப்பு, அவமானம், தான் செய்ய நினைக்கும் காரியத்தை செய்யமுடியவில்லை என்ற வருத்தம்.
  • புற்றுநோய் : ஆழ்ந்த காய மனதுடன் ஜீவித்தல் , வெளியில் சொல்லமுடியாத இரகசியத்தை மனதில் பூட்டி வைத்திருத்தல் , பகைமையைச் சுமந்து கொண்டிருத்தல்.
  • மார்பு வலி : தனிமையாகிவிட்டது போல் நினைத்தல், பயம், தான் வாழ்வில் போதுமானவற்றை செய்யவில்லை , இனியும் செய்ய இயலாது என்ற முடிவு.
இருங்க! இருங்க! அடுத்தவகளுக்கு என்ன நடந்திருக்கும் என நினைத்துப்பார்க்க ஓடிராதீங்க !

நாம் செல்லும் பாதையில் இவைகளை எல்லாம் சரிபடுத்திக்கொண்டால் அனாவசியமான நோய்த் தொல்லையிலிருந்து நாம் தப்பிப் பிழைக்கலாம்.

மனித உறவுகளை முன்னிறுத்தி கூறியிருப்பதால் இதை உங்களிடம் பகிர வேண்டும் என்ற ஆவலுடன் ...

"தீதும் நன்றும் பிறர் தர வாரா "... சரிதானே ...

Saturday, August 1, 2009

இதற்காகத்தானா?



கடைக்குக் காய் வாங்கச் சென்ற மீனாம்பாள் அங்கே அன்னலட்சுமியைக் கண்டதும் முகம் மலர்ந்தாள். பின்னே என்ன சும்மாவா ஆறு மாதம் தன் மகனுடன் இருந்துவிட்டு வருவதாகக் கூறி அமெரிக்கா சென்று திரும்பியவளாச்சே!

மருமகனின் பிரசவம், குழந்தை என ஒப்புக்கு நலம் விசாரித்துவிட்டு, அவள் சுற்றிப் பார்த்த இடங்களைப் பற்றி விசாரிக்கும் தனது ஆவலான கேள்விக்குத் தாவினாள், மீனாம்பாள்.
"அத ஏன் கேக்கறீங்க, ஒரே பனி. நான் தான் குழந்தைக்கு ஒத்துக்காதுன்னு எங்கும் போக வேண்டாம்னுட்டேன். எனக்கு நாலு எடம் காட்ட முடியலைன்னு என் மருமவளுக்குக் கவலைதான். ஆமா உங்க மகன் தான் துபாய்க்குக் கூப்பிடறான்னு சொல்லுவீங்களே, போகலாமில்ல" , என்று வேறு கேள்விகள் வரும்முன் தனது கேள்வியைத் தொடுக்க முயன்றாள் அன்னலட்சுமி.

"எங்கக்கா! உடல் நலம் ஒத்துவரணும்ல. இங்கேயும் மக பிள்ளைகள ஸ்கூல் விட்டு கூட்டிவர சாப்பிட வைக்கன்னு நேரம் சரியாப் போது"... எனக் கூறிக்கொண்டே இடத்தை வெகு விரைவில் காலிசெய்தாள், மீனாம்பாள்.

எனக்கும் வெளிநாடு பார்க்கணும்னு ஆச தான். அவனவன் கல்யாணமாகி ஒரு ஒருவருஷத்திலோ ரெண்டு வருஷத்திலோ கூப்பிடறான். நம்ம பிள்ளைக்கு அஞ்சரை வருஷமாச்சு இன்னும் நம்மைக் கூப்பிடணும்னு நினைக்கலை போல இருக்கு என நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.

ஒருமாதம் கழித்து மகனிடமிருந்து சிணுங்கிய தொலைபேசி "உனக்கு பேரக் குழந்தை பிறக்கப்போகுது என்ற சந்தோஷச் செய்தியை ஒலித்தது. பிரசவ டயத்துல நீயும் இங்க வர்றமாரி ஏற்பாடு செய்றேன் மா என அன்பாக அடுக்கியும் ஒலித்தது.

எட்டு மாதத்திற்குள் மீனாம்பாள் துபாய் பறக்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் நடந்தேறியன. மீனாம்பாளும், மகன், மருமகளுக்கு வேண்டிய துணிமணி, பலகாரங்கள் மசாலாக்கள் என அனைத்தையும் ஆவலுடன் தயார் செய்து வைத்தாள். தான் விமானத்தில் பறக்கப்போகும் தருணத்தை நினைத்து ஒரு சிறு பிள்ளையாகவே மாறியிருந்தாள். துபாய் போரனாக்கும் எனக் கூறவேண்டியவர்களுடன் கூறி பெருமிதமடைந்தாள்.

மகனின் வீட்டிற்க்கு வந்தாயிற்று. இன்னும் ஒரு வாரத்தில் மருமகளின் பிரசவத்தை எதிர்பார்க்கலாம் என்பதால் பொருட்களின் உபயோகங்கள், இருப்பிடங்கள், அருகே கடைகளில் வாங்கும் விபரங்கள் பற்றித் தெரிந்து கொண்டாள். சரியாகப் பத்துநாள் கழித்து குழந்தை பிறந்தது. வீட்டு வேலைகள் செய்வதும், குழந்தையை கவனிக்க, மகனுக்குத் தேவையனவைகளைச் செய்து கொடுத்தனுப்ப என இரண்டரை மாதங்கள் உருண்டோடின. இன்னும் ஓரிரு நாட்கள் தான் எஞ்சியிருந்தது திரும்பிச் செல்ல. இதற்கிடையில் எத்தனையோ மனஸ்தாபங்கள். அங்கிருந்து எப்படா கிளம்புவோம் என்ற எண்ணமே தலைதூக்கி நின்றது.

நாடு திரும்பிய மறுநாள் மீனாம்பாள் கோயிலுக்குச் சென்றாள். அங்கே அன்னலெட்சுமி அவளை நோக்கி வருவது தெரிந்தது. " நீங்க என்ன எடம் பாத்தீங்க" என்று தனது கிண்டலை வெளிக்காட்டாமல் வினவினாள் அன்னலெட்சுமி. " நல்ல குளிரு, குழந்தையை வச்சுக்கிட்டு எங்க போறது. மகன் கூட நிறைவாகப் பொழுது ஓடிட்டுது என்று ஏதோ கூறி செமாளித்த, பெருமூச்சுவிட்டாள் மீனாம்பாள்.

அம்மாவைத் தேடி அழைப்பது இதற்காகத்தானா என அன்னலேட்சுமியிடம் பேசி முடித்த பின் மீனாம்பாளின் மனதில் டியூப் லய்ட்டாக மின்னி தெளிய வைத்தது ஒரு ஒளி.

Tuesday, July 28, 2009

கேட்பாரற்று கிடப்பவை


அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வதற்கு, இன்னும் சில நிதி திரட்டும் முறைகளைப் பார்ப்போம்.

வேறென்ன இருக்கவே இருக்கு நமது சமையல் கலை. "எத்தன புத்தகத்தை புரட்டி, எவ்வளவு டிப்ஸ்களை பார்த்திருப்போம்!" ஆனால் செய்யத்தான் முடியலை என நொந்துகொள்பவர்கள் பலர்.

"நான் தேங்காய் பர்பி நன்றாகச் செய்வேன். ஆனால் என் பிள்ளைகளுக்கு இனிப்பு விருப்பமில்லை. சின்னது, நான் கெஞ்சியதற்க்காக ஒரு கடி கடிக்கும். எனக்கும், என் கணவருக்கும், இனிப்பு வகைகள் சதை போடுமே என நினைத்து அதை சாப்பிடுவதில்லை . அதனால் செய்வதையே விட்டுவிட்டேன்" எனப் புலம்பும் பலரைப் பார்த்திருப்போம்.

உங்களின் திறமைகளைக் காண்பிக்க அருமையான வழி.

அவ்வூரில் உள்ள சங்கம், அல்லது பள்ளி அலுவலகப் பணியாளர்கள் ஒன்றிணைந்து அவரவர்கள் வீட்டிலிருந்து உணவுப் பதார்த்தங்களை கொண்டுவரச் செய்து பள்ளி விழாவன்று விற்பனை செய்யலாம். அதிலிருந்து வரும் பணத்தில் பள்ளிச் சிறார்க்குத் தேவையான , சுத்தமான கழிவறை, குடிநீர், சோதனைக் கூடம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த இவைபோன்ற நிதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிதி திரட்டுவதற்காகவே பள்ளியில் விழா எடுப்பதில் ஒரு குற்றமும் இருப்பதாகத் தோன்ற வில்லை. அவ்வாறாக எடுக்கும் விழாவிற்கு, அருகே உள்ள நகரத்திலிருந்து மக்களையும் வரவேற்கலாம்.

இப்படி பணத்தை புரட்டி ஒரு சிறு வசதியைக் கொண்டுவர ரொம்பகாலம் பிடிக்குமே என நினைக்கத்தோன்றும். என்றுமே கேட்பாரற்று கிடந்தவை ஒரு சில ஆண்டிலாவது சீர்படுத்த நல்ல வாய்ப்புதானே.

பணத்தை பள்ளியிலேயே எவரேனும் அடித்துவிட்டால் என்னசெய்ய? என்று தானே அடுத்ததாக நினைக்கத் தோன்றுகிறது.
எங்கிருந்து பணம் வருகிறது, யார் திட்டமிடுகிறார்கள், என்பன போன்ற விஷயத்தை அறியாததனால் எங்கு செலவாகிறது என்ற விஷயமும் தெரியாமல் போய்விடுகிறது.

இவை போன்ற உதவியில் கலந்துகொண்ட பல கைகள் இருக்கும். சும்மா விடுமா என்ன? அதற்கு பயந்தே வேலைகள் நன்றாக நடக்கும் பாருங்களேன்.

Saturday, July 11, 2009

உபயம் பெற உபாயம்

ஆஸ்திரேலியா அரசுப்பள்ளிகள், நம் தனியார் பள்ளிகளைபோல் செயல்படுவதைக்கண்டு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

இவ்வளவு மேலாக நடத்த என்னன்ன காரணங்கள் இருக்கலாம் என நோண்டி நொறுக்கிப் பார்த்தால், பள்ளியின் மேம்பாட்டிற்கு மாணவர்களும் பெற்றோர்களும் ஒரு அங்கமாகத் திகழ்வதை இங்குக் கூறாமல் இருக்க முடியவில்லை.


ஆஸ்திரேலிய அரசு பள்ளிகளும் நம்மூர் ஸ்டைலில் நிதியே போதவில்லை என வாய்ப்பாட்டாகப் பாடினாலும் சிறிது எளிய முறையில் நிதிதிரட்டி மாணவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து வைக்கின்றனர்.


அவர்களின்முதற்தேவை 'updated' நூலக வசதி. நூலகத்திற்கு தேவையான நூல்களை நன்கு திட்டமிட்டு அதனை பதிபகத்திலுருந்து வரவழைத்துக் கடை போல் விரித்து விற்பனை நடத்துகிறது. இதில் பள்ளி மாணவர்களையே வைத்து வாங்க வைக்கின்றனர். யாரால் முதலில் வாங்கப்பட்டதோ அம்மாணவர்க்கு அந்த புத்தகம் முதலில் படிக்கக் கொடுக்கப்படுகிறது. பின்பு அதை நூலகத்திற்கு எடுத்துக் கொள்கின்றனர்.

மாணவர்களும், தான் ஒரு புத்தகத்திற்கு முதல் வாசிப்பாளராக இருத்தல் வேண்டும் என்னும் எண்ணத்தில் நூலை வாங்கிப் படிக்கின்றனர். இவ்வாறாகச் செய்யும்போது புத்தகம் படிக்கும் பழக்கத்தை கொண்டுவந்ததாகவும் ஆயிற்று , நூலகத்திற்கு புத்தகம் கிடைத்ததாகவும் ஆயிற்று. "அடிச்சது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்".

"இப்படி extra புத்தகம் வாங்க ஒருவனுக்குப் பணமிருந்தால் அவன் ஏன் அரசு பள்ளிக்குச் செல்கிறான்", என நினைக்கத் தோன்றும். சில பல டிக்கெட்டுகளைத் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்ட மாணவர்களை ஏவுவதற்கு பதில் இம்மாதிரியான பணிகளைக் கூறி ஏதேனும் அவர்களுக்கு விருப்பமான ஒரு புத்தகம் வாங்க சிறிது வசதிப்பட்டவரிடமிருந்து பணம் திரட்ட அனுமதிக்கலாம்.

இவைகளையும் மீறி யதார்த்தமுடன் சிந்திப்போமானால் கிராமங்களில் குழந்தைகள் விடுமுறை நாட்களில் அல்லது மற்ற நேரங்களில் ஏதேனும் வேலை பார்க்கின்றனர். அவ்வாறாகக் கிடைக்கும் பணத்தை சினிமா பார்க்கவோ அல்லது வேறுத் தேவையற்றவைகளுக்கோ செலவழித்துவிடுகின்றனர். அதற்கு பதில் நல்ல புத்தகங்களை வாங்கப் பழக்கி விடலாமே நம் அரசுப்பள்ளிகள்.

இன்னும் சில மேல்வேலைகளை , அதாவது fence, விளையாட்டு மைதானம் போன்றவைகளைச் சரிப்படுத்தவும் நிதி திரட்டத் தயங்குவதில்லை இப்பள்ளிகள். நாம் நமக்குத் தேவையான சில அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீர், சோதனைக்கூடம் இவற்றை சீர்படுத்த, பெற்றோர்களையும் பங்கு பெறவைக்கும் sponsor ideaக்கள் அடுத்தபதிவில் காண்போம்.

Thursday, July 2, 2009

கோக்குன்னா விடு ஜூட்


இந்த நாட்களில் கோக் மற்றும் பெப்சிக்கு ஏங்காதவர்கள் ஒரு வயது முதலே இல்லை எனலாம். வாய்பேசாவிட்டாலும் ஜாடையிலேயே புரியவைத்து விடுகிறார்கள் சுட்டிகள். இதனைக்குறித்து தீமைகள் எவ்வளவு வெளியிட்டாலும் விடுவதில்லை நாம்.

முதலாவதாகத் தெரிவது பல் பிரச்சனை. பல் மருத்துவமனையில் பாலர் க்யு மிக நீளம். இப்போதுள்ள காலகட்டத்தில் நமது அங்கங்களை 'டிங்கரிங்' பார்த்து சரிசெய்துக்கொள்ளலாம் என கங்கணம் கட்டிக்கொண்டு கோக் பெப்சி கம்பெனிகளுக்கு லாபம் குறைந்து விடாமல் பார்த்துக்கொள்பவர்களில் நாமும் கில்லாடி.
சமீபத்தில் ஒரு பிறந்தநாள் விழாவில் பத்தே மாதம் நிறைந்த குழந்தை, ஜாடையில் அடம்பிடித்து கோக்கை காண்பித்து அழ, தாயும் " எப்படி கேட்கிறான் பாருங்களேன்", என்று கூறி மிக சந்தோஷமாக ஊற்றிக் கொடுத்தததைப் பார்த்து பகீர் என்றது மனம். எங்கு சென்றாலும் இவை கிடைப்பதால் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது என்று தம்மைத் தாமே தேற்றிக் கொள்ளும் பெற்றோர்கள் பல.

ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை குழந்தைகள் வைத்திருபோர்க்கும், இனி பெற்றோர் ஆகவிருக்கும் அனைவருக்கும் சிறு யோசனை. மற்றவர்கள் "bit late".

கோக் வேண்டும் எனக் கேட்கத் துவங்கும் முதல் நாளன்று பாட்டிலை உடைத்தவுடன் ஒரு மடக்கு கொடுக்கவும். சுறுசுறுவென நாக்கில் இழுக்க இனி அதைக்கண்டால் அவர்களே ஓடி விடுவார்கள். இது கொடுமைக்கார ஷாக் மருத்துவம் என்றாலும் விவரம் தெரியும் காலம் வரை வொர்க் அவுட் ஆகும் யோசனை இது.

இதை எனது மகளுக்கு ஒன்றரை வயதில் செய்தது. வயது பத்தாகிறது. இப்பொழுது அதனைக் குறித்து அவள் வாசித்து அறிந்து கோக், பெப்சி, மிராண்டா, மற்றும் சோடா பானத்தைக் கண்டால் விடு ஜூட்.
ரொம்ப உணர்ச்சிவசப்படாதீர்கள் உங்கள் மகள் "பெரியவளானால் எப்படி" என நீங்கள் சொல்வது என்காதில் விழுகிறது.
அதான் சொன்னேனே "விவரம் தெரியும்" காலம் என்று,
Atleast பிஞ்சு உறுப்புகளில் பெற்றவர்களே நஞ்சை ஊற்றவில்லை என்ற நிம்மதியாவது கிட்டும்.