Wednesday, November 4, 2009

கேள்விகளைக் குறைப்போமே ப்ளீஸ்


புதிதாக பார்ப்பவரையோ அல்லது நீண்டநாள் கழித்து பார்க்கும் சிலரையோ, ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காகவே சில கேள்விகளைக் கேட்டு அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிவிடுகிறோம்.

நடுத்தர வயது மனிதர்களைக் கண்டவுடன் என்னடா பேச்சுத் தொடங்க என யோசித்து, "உங்கள் குழந்தை எந்த கிளாஸ் படிக்குது"ன்னு ஒரு கேள்வியை எழுப்ப , பதில், மெலிதாக "எங்களுக்குக் குழந்தையே இல்லீங்க" என்று வரும். நாம் அதை வெகு லகுவாகக் கேட்டுவிட்டு வந்து விடுகிறோம். ஆனால் இது ஒரு மன உளைச்சலாகவே அத்தம்பதியருக்கு சிறுது நாள் தேங்கி இருக்கும் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

பெரியோர்கள், ஓய்வு பெற்றவர்களிடம் , ஓய்வு ஊதியம் போதாவிட்டால் நாம் தான் ஏதோ பணம் கொடுத்து உதவபோவது போல, "வரவு பணம் பாதி ஆகிடுச்சுனா கஷ்டம் தான் என்ன?" என்று வருத்தப்படுவது போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டுவிட்டு சும்மாவிடாமல் அதற்கு ஒரு பதிலை வேற எதிர்பார்க்கிறோம். அவர்கள் அதற்கு பதிலளிக்க எவ்வாறு மனம் கூசும் என்பதை அறிய நாம் தவறிவிடுகிறோம்.

இதில் இன்னும் கூட கேள்விகள் தொடரும், "சும்மா தானே இருக்கறீங்க", அல்லது சிலர் "பொழுது எப்படி போகுது?", எனக் கிண்டலாகக் கேட்போரும் உண்டு. வயதானால் தனக்கும் இதே நிலைதான். இதைப்போன்று தன்னை யாராவது கேட்டால் எப்படி இருக்கும் என சிறிது சிந்திப்போமானால் சில கேள்விகள் நாவினில் இருந்து உதிர்வதுத் தானாக நின்றுவிடும்.

யாருக்கு வேலை இருக்கிறது, எப்பொழுது வேலை போகிறது என்று அறியமுடியாத இக்காலத்தில், நாம் "எங்கே வேலை செய்யிறீங்க?" என்பன போன்ற கேள்விகளையும் தவிர்ப்பது மிக்க நலம் என்பது என் கருத்து. ஆண்கள் வேலையில்லாமல் பெண்கள் மட்டுமே வேலை செய்து வீட்டை காப்பற்றுமிடத்தில், (என்னதான் நண்பராக இருந்தாலும்) நமது நக்கலான பேச்சு அவர்களிடம் போய் காட்டுவது முறைதானா?

சிலநேரங்களில் திருமணம் ஆகாத, ஆணோ, பெண்ணோ, வைத்திருக்கும் இடத்தில், என்னங்க வரன் பாக்குறீங்களா என்னும் சிறிய பிட்டைப் போட்டு நகர்ந்து விடுவார்கள் நம் மக்கள். என்ன கொடுமை சரவணா இது!

சிலர் நாட்பட்ட நோயுடன் இருப்பார். அவர்களைக் கண்டு இந்த நோய் சரியாபோச்சா, அந்தநோய் சரியாபோச்சா , அப்புறமும் ஏன் படுத்தே இருக்குறீங்க? என்று அவர்களையும் விட்டுவைப்பதில்லை.


"இப்படியெல்லாம் நான் கேள்வியே கேட்கிரதில்லீங்க", என்பவர்களும் இருக்கலாம். ஆனால் அந்த, அந்த ஆட்கள் இடத்தைவிட்டு நகர்ந்ததும் அவர்களை பற்றி விசாரிக்கும் ஆர்வமுள்ளவர்கள் அதிகம். இது நேரே கேட்பதை விடக் கொடுமை.

இவை போன்ற சமுதாயக் கட்டாயப் பிரச்சனையில் இருப்பவர்கள் எப்பொழுதும் இவைகளை மென்று தின்று கொண்டே இருப்பார்கள் (depression). பிறரைக் கண்டால் சிறிது ஆசுவாசம் என்றால், பிறரும் எரிகிற விளக்கில் தன்னால் முடிந்த எண்ணையை ஊற்றிவிட்டுப் பறந்து விடுவர்.

இந்த மன உளைச்சலில் உள்ளவர்கள் என்னதான் நம்மிடம் தைரியம் உள்ளவர்கள் போல் பேசினாலும், குடும்பத்தினுள்ளேயே, காரணமற்ற கோபம், குழப்பம் , வெறுப்பு , இவைகளுக்கு உள்ளாகின்றனர் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

ஆதலால் நம்மால் ஒருவருக்கு உதவ முடியாத பட்சத்தில் மனதை புண்படுத்தாமலாவது இருப்பது நல்லது என்பது என் கருத்து. நாம் சந்திப்போரை நல்ல விஷயங்கள் அல்லது பொது விஷயங்கள் பேசி மகிழ்வாக வைத்திருப்போமானால் அதுவே நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நாம் செய்யும் பெருந் தொண்டாகும்.

இது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. இருந்தாலும், தலை கலைந்துவிட்டால் மீண்டும் வாரிக்கொள்வது போல, நம் மனதின் சில இடங்களில் சீர்குலைந்திருந்தால் நம்மை நாம் சரி பார்த்துக் கொள்வதற்காகத்தான்.

என்ன நண்பர்களே கைகொடுக்குறீர்களா!!!

"கோயிலில் வாசற்படியாக இருந்தாலும், தெப்பகுளத்தில் மீனாக இருந்தாலும் குறை ஒன்றும் இல்லை"