Saturday, August 1, 2009

இதற்காகத்தானா?கடைக்குக் காய் வாங்கச் சென்ற மீனாம்பாள் அங்கே அன்னலட்சுமியைக் கண்டதும் முகம் மலர்ந்தாள். பின்னே என்ன சும்மாவா ஆறு மாதம் தன் மகனுடன் இருந்துவிட்டு வருவதாகக் கூறி அமெரிக்கா சென்று திரும்பியவளாச்சே!

மருமகனின் பிரசவம், குழந்தை என ஒப்புக்கு நலம் விசாரித்துவிட்டு, அவள் சுற்றிப் பார்த்த இடங்களைப் பற்றி விசாரிக்கும் தனது ஆவலான கேள்விக்குத் தாவினாள், மீனாம்பாள்.
"அத ஏன் கேக்கறீங்க, ஒரே பனி. நான் தான் குழந்தைக்கு ஒத்துக்காதுன்னு எங்கும் போக வேண்டாம்னுட்டேன். எனக்கு நாலு எடம் காட்ட முடியலைன்னு என் மருமவளுக்குக் கவலைதான். ஆமா உங்க மகன் தான் துபாய்க்குக் கூப்பிடறான்னு சொல்லுவீங்களே, போகலாமில்ல" , என்று வேறு கேள்விகள் வரும்முன் தனது கேள்வியைத் தொடுக்க முயன்றாள் அன்னலட்சுமி.

"எங்கக்கா! உடல் நலம் ஒத்துவரணும்ல. இங்கேயும் மக பிள்ளைகள ஸ்கூல் விட்டு கூட்டிவர சாப்பிட வைக்கன்னு நேரம் சரியாப் போது"... எனக் கூறிக்கொண்டே இடத்தை வெகு விரைவில் காலிசெய்தாள், மீனாம்பாள்.

எனக்கும் வெளிநாடு பார்க்கணும்னு ஆச தான். அவனவன் கல்யாணமாகி ஒரு ஒருவருஷத்திலோ ரெண்டு வருஷத்திலோ கூப்பிடறான். நம்ம பிள்ளைக்கு அஞ்சரை வருஷமாச்சு இன்னும் நம்மைக் கூப்பிடணும்னு நினைக்கலை போல இருக்கு என நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.

ஒருமாதம் கழித்து மகனிடமிருந்து சிணுங்கிய தொலைபேசி "உனக்கு பேரக் குழந்தை பிறக்கப்போகுது என்ற சந்தோஷச் செய்தியை ஒலித்தது. பிரசவ டயத்துல நீயும் இங்க வர்றமாரி ஏற்பாடு செய்றேன் மா என அன்பாக அடுக்கியும் ஒலித்தது.

எட்டு மாதத்திற்குள் மீனாம்பாள் துபாய் பறக்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் நடந்தேறியன. மீனாம்பாளும், மகன், மருமகளுக்கு வேண்டிய துணிமணி, பலகாரங்கள் மசாலாக்கள் என அனைத்தையும் ஆவலுடன் தயார் செய்து வைத்தாள். தான் விமானத்தில் பறக்கப்போகும் தருணத்தை நினைத்து ஒரு சிறு பிள்ளையாகவே மாறியிருந்தாள். துபாய் போரனாக்கும் எனக் கூறவேண்டியவர்களுடன் கூறி பெருமிதமடைந்தாள்.

மகனின் வீட்டிற்க்கு வந்தாயிற்று. இன்னும் ஒரு வாரத்தில் மருமகளின் பிரசவத்தை எதிர்பார்க்கலாம் என்பதால் பொருட்களின் உபயோகங்கள், இருப்பிடங்கள், அருகே கடைகளில் வாங்கும் விபரங்கள் பற்றித் தெரிந்து கொண்டாள். சரியாகப் பத்துநாள் கழித்து குழந்தை பிறந்தது. வீட்டு வேலைகள் செய்வதும், குழந்தையை கவனிக்க, மகனுக்குத் தேவையனவைகளைச் செய்து கொடுத்தனுப்ப என இரண்டரை மாதங்கள் உருண்டோடின. இன்னும் ஓரிரு நாட்கள் தான் எஞ்சியிருந்தது திரும்பிச் செல்ல. இதற்கிடையில் எத்தனையோ மனஸ்தாபங்கள். அங்கிருந்து எப்படா கிளம்புவோம் என்ற எண்ணமே தலைதூக்கி நின்றது.

நாடு திரும்பிய மறுநாள் மீனாம்பாள் கோயிலுக்குச் சென்றாள். அங்கே அன்னலெட்சுமி அவளை நோக்கி வருவது தெரிந்தது. " நீங்க என்ன எடம் பாத்தீங்க" என்று தனது கிண்டலை வெளிக்காட்டாமல் வினவினாள் அன்னலெட்சுமி. " நல்ல குளிரு, குழந்தையை வச்சுக்கிட்டு எங்க போறது. மகன் கூட நிறைவாகப் பொழுது ஓடிட்டுது என்று ஏதோ கூறி செமாளித்த, பெருமூச்சுவிட்டாள் மீனாம்பாள்.

அம்மாவைத் தேடி அழைப்பது இதற்காகத்தானா என அன்னலேட்சுமியிடம் பேசி முடித்த பின் மீனாம்பாளின் மனதில் டியூப் லய்ட்டாக மின்னி தெளிய வைத்தது ஒரு ஒளி.

Tuesday, July 28, 2009

கேட்பாரற்று கிடப்பவை


அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வதற்கு, இன்னும் சில நிதி திரட்டும் முறைகளைப் பார்ப்போம்.

வேறென்ன இருக்கவே இருக்கு நமது சமையல் கலை. "எத்தன புத்தகத்தை புரட்டி, எவ்வளவு டிப்ஸ்களை பார்த்திருப்போம்!" ஆனால் செய்யத்தான் முடியலை என நொந்துகொள்பவர்கள் பலர்.

"நான் தேங்காய் பர்பி நன்றாகச் செய்வேன். ஆனால் என் பிள்ளைகளுக்கு இனிப்பு விருப்பமில்லை. சின்னது, நான் கெஞ்சியதற்க்காக ஒரு கடி கடிக்கும். எனக்கும், என் கணவருக்கும், இனிப்பு வகைகள் சதை போடுமே என நினைத்து அதை சாப்பிடுவதில்லை . அதனால் செய்வதையே விட்டுவிட்டேன்" எனப் புலம்பும் பலரைப் பார்த்திருப்போம்.

உங்களின் திறமைகளைக் காண்பிக்க அருமையான வழி.

அவ்வூரில் உள்ள சங்கம், அல்லது பள்ளி அலுவலகப் பணியாளர்கள் ஒன்றிணைந்து அவரவர்கள் வீட்டிலிருந்து உணவுப் பதார்த்தங்களை கொண்டுவரச் செய்து பள்ளி விழாவன்று விற்பனை செய்யலாம். அதிலிருந்து வரும் பணத்தில் பள்ளிச் சிறார்க்குத் தேவையான , சுத்தமான கழிவறை, குடிநீர், சோதனைக் கூடம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த இவைபோன்ற நிதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிதி திரட்டுவதற்காகவே பள்ளியில் விழா எடுப்பதில் ஒரு குற்றமும் இருப்பதாகத் தோன்ற வில்லை. அவ்வாறாக எடுக்கும் விழாவிற்கு, அருகே உள்ள நகரத்திலிருந்து மக்களையும் வரவேற்கலாம்.

இப்படி பணத்தை புரட்டி ஒரு சிறு வசதியைக் கொண்டுவர ரொம்பகாலம் பிடிக்குமே என நினைக்கத்தோன்றும். என்றுமே கேட்பாரற்று கிடந்தவை ஒரு சில ஆண்டிலாவது சீர்படுத்த நல்ல வாய்ப்புதானே.

பணத்தை பள்ளியிலேயே எவரேனும் அடித்துவிட்டால் என்னசெய்ய? என்று தானே அடுத்ததாக நினைக்கத் தோன்றுகிறது.
எங்கிருந்து பணம் வருகிறது, யார் திட்டமிடுகிறார்கள், என்பன போன்ற விஷயத்தை அறியாததனால் எங்கு செலவாகிறது என்ற விஷயமும் தெரியாமல் போய்விடுகிறது.

இவை போன்ற உதவியில் கலந்துகொண்ட பல கைகள் இருக்கும். சும்மா விடுமா என்ன? அதற்கு பயந்தே வேலைகள் நன்றாக நடக்கும் பாருங்களேன்.