Wednesday, March 24, 2010

ஐயோ அம்மா/ப்பா அடிக்காதீங்க...


ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் போது ஒரு குழந்தை தன் அம்மாவிடம் இருக்கும் ஒரு பொருளை கேட்டு அடம்பிடித்து அழ, அம்மா அங்கும் இங்கும் பார்த்து ஒரு வித சங்கடத்துடன் சிரித்து விட்டு குழந்தையை கஷ்டப்பட்டு செல்லமா சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அந்தம்மாவிற்கு அடிக்கணும்னு தன்னால கை துருதுருன்னு வந்தாலும், ஒருவழியா செமாளித்து அழுகையை நிறுத்தும் போது , லேசான "குளிரிலும் வியர்வை முத்துக்கள் முகத்தில் படர்ந்து விட்டன.

என்ன செய்வது ஆஸ்திரேலியா வாச்சே. நம்மூர்னா இந்நேரம் முதுகில் இரண்டு விழுந்திருக்கும் அக்குழந்தைக்கு.

"பிரம்பைக் கையாளாதவன் தன் மகனைப் பகைக்கிறான்" என்கிறது பைபிள். குழந்தைகளை அடித்து வளர்க்க வேண்டும் என்பது காலம் காலமாக நாம் பின்பற்றும் கலாச்சாரம்.

தண்ணியடிப்பவன், போதை பொருளுக்கு அடிமையானவன், தன் குழந்தைகளை படுத்தும் பாட்டை அறிந்து, எவனுமே குழந்தைகளை அடிக்கக் கூடாது என சட்டம் இயற்றினர். இதையும் மீறி "சாதாரண", குடும்பங்களிலும் குழந்தைகளை அடித்து வதைப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது பல ஆய்வுகள்.

தன்னால் எதிர்க்க முடியாத பருவத்தில் குழந்தைகளை(0-14) திருத்துகிறேன் பேர்வழி என்று அவர்களை அடித்து துன்புறுத்துவதில் எந்த வித நியாயமும் இல்லை.

"ன்" எனச் சொல்லபோகும் எல்லா இடத்திலும் "ள்" பொருந்தும்.

"நல்லா எத்தன நாள் பொறுமையா சொன்னேன் தெரியுமா! ஒரு நாள் விட்டு விளாசினேன் அப்புறம் தான் சரியானான்" என வெற்றி வாகையோடு சில பெற்றோர்கள் கூறுவார்கள்.

நல்லாச் சொன்ன நாளெல்லாம் நம் "மனநிலை " என்னவாக இருந்தது, அடித்த நாளான்று நம் "மனநிலை " என்னவாக இருக்கிறது என்பதை சிறிது ஆராய்ந்தால் நமக்கே விளங்கும்.

படித்த புத்தகமோ, விளையாட்டு பொருளோ வீட்டில் போட்டது போட்ட படி கிடப்பது என்றும் வழமை தான் என வைத்துக் கொள்வோம். என்றுமில்லாமல் அதற்காக திடீரென dose விடுவோம் . நன்கு சிந்தித்துப் பார்த்தால், அலுவலகலத்தில் ஒன்று, நல்ல பாராட்டு கிடைத்திருக்கலாம் அல்லது அர்ச்சனை மழையும் இருக்கலாம்.


இது போன்ற காரணங்கள் தான் பள்ளியிலும். என்றைக்கும் விட வகுப்பில் சத்தம் குறைவாக இருக்கும் . திடீரென ஆசிரியை தோன்றி "என்ன இப்படி சத்தம் போடுறீங்க" என்று கூறி, வசவு மழை பொழிந்து, எல்லோரும் முட்டு கால் போடுங்க எனக் கூறிவிட்டு, தான் இன்னும் ஏன் முடித்து தரவில்லை எனத் திட்டு வாங்கியிருக்கும் அலுவலக வேலையோ அல்லது திருத்தல் வேலைகளையோ வேக வேகமாக முடித்து விட்டு bell அடிக்கும் முன் , "ம்ம்ம் இப்படித்தான் அமைதியா இருக்கணும் என்ன" என்று கூறி விட்டு ஓடிவிடுவர்.

குழந்தைகளை அடிப்பதற்கும், தண்டிப்பதற்கும் , நூறு காரணங்கள் கூறினாலும், உண்மையான காரணம் அடித்தவருக்கே வெளிச்சம்.

சரி இப்பொழுது குழந்தைகள் எப்படிப் பட்ட பெரியோர்களின்(பெற்றோர்/ஆசிரியர், பராமரிப்பாளர்-carer) மனநிலையில் அடி வாங்கப் படுகிறார்கள் என பார்ப்போம்.

மனவுளைச்சல் : வேலை, பணம் பற்றாக்குறை, உடல் நலம் போதாமை, கணவன்-மானைவி பிரச்சனை.

கூடுதலான எதிர்பார்ப்பு : மெதுவாகக் கற்றுகொள்ளும் திறன் படைத்த குழந்தைகள் வெகுவாக பாதிக்கப் படுகிறார்கள்.

பிற: மிகக் குறைந்த குழந்தை வளர்ப்புத் திறன், குழந்தையை மாற்றாக பார்த்துக் கொள்ள ஆளில்லாமல் தவிப்பவர்கள், குழந்தைகளின் தேவையை முன்னிறுத்தாமல் அவசரத்தில் இருப்பவர்கள் இதில் அடங்குவர்.

அடித்து துன்புறுத்துவோர் பற்றி இன்னும் சில.

  • ஏழை மக்களும், படிப்பறிவில் குறைந்தவர்களே குழந்தையை அடித்து துன்புறுத்துவர் என்பது உண்மையல்ல.
  • மிகக்குறைந்த வயதில் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் இவ்வாறு நடந்து கொள்வர் என்பதும் உண்மையல்ல.
  • பக்திமான்கள், மற்றும் சமுதாயத்தில் நல்ல வேலையில் இருப்போர் கூட குழந்தையை அடித்து துன்புறுத்துபவர்களில் சளைத்தவர்கள் அல்ல.
இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வெட்கம், பயம், தனிமைப் படுதல், கவலை, கைவிடப் பட்ட நிலை, போன்றவைகளை உணர்கிறார்கள். இது தவிர மற்ற குழந்தைகளிடம் வன்மையாக நடந்து கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்.

இவ்வாறான குழந்தைகள் அடி ஒன்றுக்கே "tune" ஆகி விடுகிறார்கள் என்பதை நன்கு அறிந்து கொள்ளலாம் . அடி என்ற ஒன்று கிடைக்கும் வரை என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்பது குழந்தைகள் மனதில் பதிந்து விடுகிறது.

ம்ம்ம்... அதுக்காக அடிக்காம எப்படி இருக்கிறது? சரி, அடித்தே ஆகவேண்டும் எனும் அவசியம் ஏற்படும் பொழுது முழங்கால் கீழ் அடிப்பது சிறிது நலம்.

இனி கையோ, காலோ, குச்சியோ,பெல்டோ ஓங்கும் போது ஒரு நொடி யோசிப்போமா?